×

அரசு மருத்துவமனைகளில் பிற மாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 4,032 பேர் சிகிச்சை

சென்னை: சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 2023ல் பிற மாநில நோயாளிகள் 4,032 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எல்லை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து சிறப்பு சிகிச்சைக்காக வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் நல்ல கவனிப்பு, சிறந்த இலவச சிகிச்சை, அறுவை சிகிச்சை, பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் எல்லை மாநிலம் மட்டுமின்றி வெகு தொலைவில் இருந்தும் வருகின்றனர்.

குறிப்பாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 2022ல் பிற மாநிலங்களில் இருந்து 3,039 நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இது 2023ல் 4,032 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 27 மாநிலத்தில் இருந்து சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு வந்துள்ளதாக மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் ராஜிவ் காந்தி மருத்துவமனை நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறது.

2023 தரவுகளைப் பார்த்தால் பெரும்பாலான நோயாளிகள் ஆந்திராவை சேர்ந்தவர்களாக உள்ளனர். பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அதிக அளவில் வருகின்றனர். குறிப்பாக, பக்கவாதம், இதய நோய்கள், புற்றுநோய்கள், சிறுநீரக கோளாறுகள் போன்ற குறிப்பிட்ட சிகிச்சைகளுக்காக வட மாநிலங்களில் இருந்து நோயாளிகள் ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு வருகின்றனர்.

இதற்கு காரணம் குறைந்த செலவு மற்றும் சில சிகிச்சைகளை இலவசமாக வழங்குவதும்தான் என்றார். ஸ்டான்லி மருத்துவமனையில் மற்ற மாநிலங்களில் இருந்து மாதம் 80 முதல் 90 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். குழந்தைகள் மருத்துவமனைக்கு அண்டை மாநிலத்தில் இருந்து சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில் 10 முதல் 15 சதவீதம் நோயாளிகள் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான்.

The post அரசு மருத்துவமனைகளில் பிற மாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 4,032 பேர் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Hospital ,Chennai ,Andhra Pradesh ,Karnataka ,Kerala ,
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி...